திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடக்கம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது.

Update: 2023-07-05 20:37 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் கும்பாபிஷேகம், கடந்த 2006-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் தொடங்கி உள்ளன. இதன் முதற்கட்ட திருப்பணியாக நேற்று முன்தினம் மாலை முதற்கால யாக பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் 2-ம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. இதில், கோவில் கொடி உருவம் பொறிக்கப்பட்ட அத்திமர பலகை வைக்கப்பட்டு, அதற்கு வேதமந்திரங்கள் முழங்க பாலாலயம் நடைபெற்றது.

இதில் கோவில் பரம்பரை அறங்காவலர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதன்பிறகு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ் தலைமையில் கும்பாபிஷேக திருப்பணிகள் குழுவினர் கொடிமரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த திருப்பணியில் அம்மனின் கருவறை முழுவதும் கல் கட்டிடமாக மாற்றப்படுகிறது. கோவில் சுற்றுப்பிரகாரம் முழுவதும் கருங்கற்களால் அமைக்கப்படுகிறது. அம்மனின் தங்க, வைர நகைகளை வைப்பதற்கு பாதுகாப்பு பெட்டகமும், நவக்கிரகத்திற்கு தனி சன்னதியும் உள்பட 13 திருப்பணிகள் செய்யப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்