நெற்பயிர் நடவு செய்யும் பணி தீவிரம்

தியாகதுருகம் பகுதியில் நெற்பயிர் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-10-21 18:45 GMT

தியாகதுருகம் பகுதியில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விளை நிலங்கள் உள்ளன. நெல், கரும்பு, உளுந்து, பருத்தி, மக்காச்சோளம், கம்பு, மணிலா, எள் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. திம்மலை, தென்னேரிகுப்பம், பல்லக்கச்சேரி, பீளமேடு, நாகலூர், சாத்தனூர், பொறையூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 8 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர் நடவு செய்வது வழக்கம்.

இதையொட்டி விவசாயிகள் கடந்த ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் நாற்று விடும் பணியை தொடங்கினர். இதனை தொடர்ந்து விவசாய நிலங்களை டிராக்டர் மூலம் உழவு செய்து நடவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பருவமழை தொடங்கினால்...

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், நீண்ட நாள் நெற்பயிர்களுக்கு ஆடி மற்றும் ஆவணி மாதங்களிலும், குறுகிய கால நெற்பயிர்களுக்கு புரட்டாசி மாதத்திலும் நாற்று விடும் பணியில் ஈடுபடுவோம். நாற்று விட்ட 30 நாட்களில் நடவு செய்வோம். வடகிழக்கு பருவமழை இதுவரை தொடங்காத நிலையில் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீரை பாய்ச்சி டிராக்டர்கள் மூலம் உழவு செய்து செம்மைப்படுத்தியுள்ளோம். தற்போது நெல் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருவ மழை தொடங்கியதும் ஏரி நீர் பாசனம் மூலம் கூடுதல் பரப்பளவில் நடவு செய்யவும் தயார் நிலையில் இருக்கிறோம் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்