உயர் அழுத்த மின்கம்பியை தரையில் பதிக்கும் பணி தொடங்கியது
உக்கடம் மேம்பால பணிக்காக உயர் அழுத்த மின்கம்பியை தரையில் பதிக்கும் பணி தொடங்கி உள்ளது
கோவை
உக்கடம் மேம்பால பணிக்காக உயர் அழுத்த மின்கம்பியை தரையில் பதிக்கும் பணி தொடங்கி உள்ளது.
உக்கடம் மேம்பாலம்
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோவை உக்கடம் பகுதியில் ரூ.450 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆத்துப்பாலம் அருகே தொடங்கும் மேம்பாலத்துக்கு உக்கடம் போலீஸ் நிலையம் அருகே இறங்குதளம் அமைக்கப்படுகிறது.
அதுபோல் சுங்கம் பைபாஸ் ரோட்டில் இருந்து இந்த மேம்பாலத்தில் ஏறுவதற்காக ஏறுதளமும், ஒப்பணக்கார வீதி நரசிம்மர் கோவில் அருகே மற்றொரு ஏறுதளமும் அமைக்கப்படு கிறது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து விட்டதால் மேம்பாலம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
உயர் அழுத்த மின்கம்பிகள்
இந்த நிலையில் சுங்கம் பைபாஸ் சாலையில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இந்த மின்கம்பிகளை அகற்றினால் மட்டுமே மேம்பாலம் அமைக்க முடியும். எனவே அந்த மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதை தரையில் குழி தோண்டி புதைவட பாதையாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து உக்கடம் பெரியகுளம் வழியாக வரும் உயர் அழுத்த மின்கம்பிகளை தரைப்பகுதியில் கேபிள்கள் மூலம் பதிக்கும் பணிக்காக உக்கடம் குளக்கரையில் கோபுரம் அமைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து உக்கடம் பஸ் நிலையத் தில் இருந்து சுங்கம் பைபாஸ் செல்லும் சாலையின் நடுவே கேபிள்களை பதிப்பதற்காக தரையில் குழி தோண்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
தரையில் பதிக்கும் பணி
ஒத்தக்கால்மண்டபம், வடமதுரை ஆகிய பகுதிகளில் இருந்து உக்கடம் துணை மின்நிலையத்துக்கு மின்சாரம் கொண்டு வருவதற்காக உயர் அழுத்த மின்கம்பங்கள் போடப்பட்டு இருந்தன. தற்போது மேம்பால பணிக்காக அந்த மின்கம்பிகள் தரையில் பதிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
இதற்காக உக்கடம் பெரியகுளக்கரையில் ஒரு மின்கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து தொடங்கும் புதைவட மின்கேபிள்கள் 900 மீட்டர் தூரத்துக்கு உக்கடம் துணை மின் நிலையம் வரை கொண்டு வரப்படுகிறது.
அங்கு ஒரு மின்கோபுரம் அமைக்கப்பட்டு அதில் கம்பிகள் அமைத்து அதன் மூலம் துணை மின்நிலையத்துக்கு மின்சாரம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த பணி தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.
இதற்காக சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த மின்கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு விடும். இந்த பணிகள் முடிவடைந்த தும் மேம்பாலத்துக்கு ஏறுதளம் அமைக்கும் பணி தொடங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.