மகளிர் சுய உதவிக்குழுவினர் போராட்டம்
கூட்டுறவு வங்கியில் கடனை தள்ளுபடி செய்யவில்லை என கூறி மகளிர் சுய உதவிக்குழுவினர் அருப்புக்கோட்டை அருகே போராட்டம் நடத்தினார்.
அருப்புக்கோட்டை
கூட்டுறவு வங்கியில் கடனை தள்ளுபடி செய்யவில்லை என கூறி மகளிர் சுய உதவிக்குழுவினர் அருப்புக்கோட்டை அருகே போராட்டம் நடத்தினார்.
சாலைமறியல்
கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றிருக்கும் மகளிர் சுய உதவி குழு கடனை தற்போது தமிழக அரசு தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழை வழங்கி வருகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் கடன் பெற்ற மகளிர் சுய உதவி குழுவினர் பலருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என புகார் தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த மகளிர் குழுவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குருந்தமடம் கிராமத்தில் கூட்டுறவு வங்கி அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கடன் தள்ளுபடி செய்யப்படுவதில் அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் தெரிவித்தனர்.
போராட்டம்
இந்தப் போராட்டம் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்றது. இதனை அடுத்து விரைந்து வந்த பந்தல்குடி போலீசார் மற்றும் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.