மகளிர் உரிமைத்தொகை திட்டம்:ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் வினியோகம்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது என்று வருவாய் அதிகாரி தெரிவித்தார்.
ஊட்டி: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது என்று வருவாய் அதிகாரி தெரிவித்தார்.
மகளிர் உரிமைத்தொகை
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளது. பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் மூலம் இதனை செயல்படுத்த முடிவு செய்து விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் குறித்த நெறிமுறைகளை அரசு வெளியிட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வீடு, வீடாக வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே சென்று விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் வழங்கப்படும்.
அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பு ஊட்டி என்.சி.எம்.எஸ். அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
சிறப்பு முகாம்
நீலகிரி மாவட்டத்தில் 403 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 148 ரேஷன் அட்டைகள் உள்ளன. ரேஷன் கடைகள் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 400 முகாம்களில் தன்னார்வலர்கள் மூலம் விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதையொட்டி வருகிற 20-ந் தேதி முதல் விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் வினியோகிக்கப்படும். இதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் வந்துள்ளன.
இதில் 500, 1,000, 1,500, எண்ணிக்கையிலான ரேஷன் கார்டுகள் உள்ள கடைகள் அடிப்படையில் பிரிக்கப்படும். இதில் 500 கார்டுகள் உள்ள கடைக்கு தினசரி 60 டோக்கன்களும், கூடுதல் ரேஷன் கார்டுகள் உள்ள கடைகளுக்கு கூடுதல் டோக்கன்களும் வழங்கப்படும். வருகிற 24-ந் தேதி முதல் தன்னார்வலர்கள் மூலம் நடக்கும் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.