முளைப்பாரிகளுடன் பெண்கள் ஊர்வலம்

ராஜபாளையம் அருகே முளைப்பாரிகளுடன் பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-08-10 19:28 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே முளைப்பாரிகளுடன் பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.

முளைக்கொட்டு திருவிழா

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான நெசவுத்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் முளைக்கொட்டு திருவிழா நடத்துவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் இந்த ஆண்டு முளைப்பாரி திருவிழா நடத்தப்பட்டது. இதைெயாட்டி சத்திரப்பட்டி புது தெரு, வடக்குத் தெரு, நடுத்தெரு, கீழ, மேல் பகுதி போன்ற பகுதிகளில் முளைக்கொட்டு திருவிழா நடத்தப்பட்டது.

பெண்கள் ஊர்வலம்

செல்வமுளை மாரியம்மன், யோக மாரியம்மன், முளை மாரியம்மன் போன்ற அம்மன் கோவிலுக்கு முளைப்பாரிகளுடன் கும்மியடித்து பெண்கள் வழிபாடு நடத்தினார்கள். தொடர்ந்து முளைப்பாரிகளுடன் ஊர்வலமாக சென்றனர்.

அனைத்து கிராமங்கள் வழியாக அனைத்து தெருக்களும் சுற்றி முளைப்பாரிகளுடன் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் ஊர்வலமாக சென்றனர். நத்தம்பட்டி சாலையில் உள்ள துரைமடம் அருகே உள்ள கிணற்றில் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன.

முளைக்கொட்டு திருவிழாவை யொட்டி அனைத்து மருத்துவத்துணி உற்பத்தியாளர்கள், பேண்டேஜ் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதிக்கான தொழிற்சாலைகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தன. விழா ஏற்பாடுகளை 3 ஊர் தலைவர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.. மேலும் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி தலைமையில் ராஜபாளையம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்