மகளிர் உரிமைத்தொகை இந்தியாவிலேயே முதன்மையான திட்டமாக இருக்கும்-அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் இந்தியாவிலேயே முதன்மையான திட்டமாக இருக்கும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Update: 2023-09-15 18:50 GMT

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் இந்தியாவிலேயே முதன்மையான திட்டமாக இருக்கும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் கசிநாயக்கன்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை அரசு சிறப்பு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான நந்தகோபால், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வரவேற்றார்.

அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு 3,164 பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகைக்கான ஆணைகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தாயாக இருந்து

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 கோடி தமிழர்களுக்கும் தாயாக இருந்து தமிழ் சமுதாயத்திற்கும், தாய்மார்களுக்கும் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதுபோல் கிராமத்தில் இருக்கின்ற தாய்மார்கள் தெளிவாக இருந்தால் நல்ல அரசு அமைக்க முடியும்.

பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் பெண்களை படிக்க சொன்னார்கள். கலைஞர் ஆட்சியில்தான் மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டு வங்கிகள் மூலம் கடன் வழங்கி அவர்களால் சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை தந்தவர் கருணாநிதி.

குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த...

மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஒரு உன்னதமான திட்டமாகும். இந்தியாவிலேயே முதன்மையான திட்டமாக இது இருக்கும். மேலும் புதுமை பெண் திட்டம் மிகவும் பயன் உள்ள திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் ரூ.1,000 வழங்குவது போட்டி தேர்வுக்கு புத்தகம் உள்ளிட்டவை வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பெண்கள் அரசுத்துறை செயலாளராகவும், மாவட்ட கலெக்டராகவும், மாவட்ட வருவாய் அலுவலராகவும் பல்வேறு நிலை அரசு அலுவலர்களாகவும் பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். உள்ளாட்சியில் மகளிருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனையும் தாண்டி பெண்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

கலைஞர் பாதையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். பெண்கள் காலையில் இருந்து இரவு வரை செய்கின்ற வேலைக்கு உரிமைத் தொகையாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் ஒரு அண்ணனாக இருந்து நான் தருகிறேன் என்று இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். அனைத்து பெண்களும் 1,000 ரூபாயை பெற்றுக் கொண்டு உங்கள் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முதல்-அமைச்சர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் குணசேகரன், முருகேசன், மோகன்ராஜ், அசோக்குமார், நகர மன்ற தலைவர்கள் சங்கீதா வெங்கடேஷ், காவியா விக்டர், உமா சிவாஜிகணேசன், ஏஜாஸ் அகமது, ஒன்றியக்குழு தலைவர்கள் திருமதி திருமுருகன், விஜயா அருணாசலம், சத்யா சதீஷ், வெண்மதி, சங்கீதா பாரி, சுரேஷ்குமார், பேரூராட்சி தலைவர்கள் சசீகலா சூரியகுமார், தமிழரசி, பூசா ராணி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சி.பெ.முருகேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் தனித்துணை கலெக்டர் பெலிக்ஸ்ராஜா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்