மணிமேகலை விருதுக்கு மகளிர் சுயஉதவி குழுவினர் விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு மகளிர் சுயஉதவி குழுவினர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மணிமேகலை விருதுக்கு மகளிர் சுயஉதவி குழுவினர் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகளிர் சுயஉதவி குழுக்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரகப்பகுதியில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுயஉதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புற பகுதியில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஊரகப்பகுதிகளை சார்ந்த 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் வீதமும், 5 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும், 1 வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.5 லட்சமும், 5 கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும். நகர பகுதிகளை சார்ந்த 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சம் வீதமும், 3 பகுதி அளவிலான கூட்டமைப்புக்கு தலா ரூ.3 லட்சமும் வழங்கப்படும்.
மணிமேகலை விருது
இ்தேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதிகளை சேர்ந்த 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், 1 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.1 லட்சமும், 1 கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.50 ஆயிரமும், நகரப்பகுதிகளை சேர்ந்த 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும், 1 பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1 லட்சமும் வழங்கப்பட உள்ளது.
எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதிகளை சேர்ந்த 4 ஆண்டுகளுக்குமேல் உள்ள தகுதிவாய்ந்த குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் மணிமேகலை விருதுக்கான விண்ணப்பங்களை தொடர்புடைய வட்டாரங்களில் வட்டார இயக்க மேலாளர்கள் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். நகரப்பகுதிகளை சேர்ந்த குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் மயிலாடுதுறை மகளிர் திட்ட இயக்குனர் அலுவலகத்தில் 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.