திருப்பூர்,
வளர் இளம் பெண்களின் தொடர் கல்வி மற்றும் பாதுகாப்பு குறித்த பொம்மலாட்ட கலைப்பயணம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கான கலைப்பயணம் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது.
சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம், சைல்டு லைன், ஆசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் ஆகியவை சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்து பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியை ரத்தினம் வரவேற்புரையாற்றினார். சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மைய செயல் இயக்குனர் நம்பி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து பேசினார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) நித்யா, குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் பள்ளி மாணவிகளுக்கு அடிப்படை கல்வியின் அவசியம், பெண்கள் பாதுகாப்பு குறித்து கலை அறப்பேரவை கலைவாணன் குழுவினர் பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதை மாணவிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இதைத்தொடர்ந்து அனுப்பர்பாளையம், அவினாசிலிங்கம்பாளையம் பள்ளிகளிலும் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது. இன்று திருப்பூரில் உள்ள சில பள்ளிகளில் இந்த பொம்மலாட்ட கலைப்பயண நிகழ்ச்சி நடக்கிறது.