கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர்: பஸ் நிலையத்தில் 2 குழந்தைகளுடன் தவித்த இளம்பெண் மீட்பு-போலீசில் பரபரப்பு புகார்

Update: 2023-01-23 18:45 GMT

அரூர்:

கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் அரூர் பஸ் நிலையத்தில் 2 குழந்தைகளுடன் தவித்த இளம்பெண் மீட்கப்பட்டார். அவர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

காதல் திருமணம்

தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள கீரைப்பட்டி கிராமம் இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் மகன் பிரசாந்த் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ்.ரெயில் நிலைய பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கீதா (21) என்ற பெண்ணுடன், பிரசாந்துக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு, கீரைப்பட்டியில் வசித்து வந்தனர். இதனிடையே அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது பிரசாந்தின் பெற்றோர், வரதட்சணை கேட்டு கீதாவை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

வரதட்சணை கொடுமை

இந்த சம்பவம் குறித்து கீதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் அந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கீதாவை அவருடைய தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து சிறிது வரதட்சணை கொடுத்து கீதா மீண்டும் தனது காதல் கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்தநிலையில் கீதா மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு 2-வதாக ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே கீதாவின் மாமனார், மாமியார் மீண்டும் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் வரதட்சணை கொடுத்தால் தான் பிரசாந்துடன் சேர்ந்து வாழ முடியும் என்று கூறி அவரை வீட்டை விட்டு துரத்தியதாக தெரிகிறது.

பஸ் நிலையத்தில் தவிப்பு

இதுகுறித்து கீதா அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த கீதா, பிறந்து 20 நாட்களே ஆன ஆண் குழந்தை மற்றும் தர்ஷன் என்ற 3 வயது மகனுடன் அரூர் பஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். அவர் கடந்த 3 நாட்களாக தனது குழந்தைகளுடன் அங்கேயே தவித்து வந்தார்.

இளம்பெண் ஒருவர் குழந்தைகளுடன் ஆதரவற்ற நிலையில் இருப்பதை கவனித்த பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரிடம் விசாரித்தனர். அப்போது கீதா தனது ஆதரவற்ற நிலையை கண்ணீர் மல்க அவர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி கணேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் அதிர்ச்சி

இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் போலீசார் அரூர் பஸ் நிலையத்துக்கு கீதாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கணவரின் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கர்ப்பமாக இருக்கும் போது வயிற்றில் உதைத்து தாக்கியதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் கீதா மற்றும் குழந்தைகளை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கீதாவின் கணவர், மாமனார், மாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசாரின் காலம் தாழ்த்திய நடவடிக்கையால் இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்