குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம்

நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-20 18:50 GMT

நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அந்த பகுதிக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்த மாநகராட்சி குழாயிலிருந்து வால்வு மூலம் பிற பகுதிக்கு தண்ணீர் திருப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக குறைந்த அளவு கூட தண்ணீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மேகலிங்கபுரம் பகுதி பெண்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் அங்குள்ள மெயின் ரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து அந்த பகுதி பெண்கள் கூறுகையில், "தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள மேகலிங்கபுரம் பகுதியில் எப்பொழுதுமே குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கும் முன்பே குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் வினியோகத்தை சீரமைத்து மேகலிங்கபுரம் பகுதி மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்துசென்று பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து செல்ல வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்