டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பெண்கள் போராட்டம்

பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே கடையை திறக்க வலியுறுத்தி மதுபிரியர்கள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-27 18:26 GMT

டாஸ்மாக் கடை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா மங்களமேட்டை அடுத்துள்ள அகரம்சீகூரில் செந்துறை- ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற ேவண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில், அகரம்சீகூர் ரெட்டிகுடிகாடு கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மாதர் சங்கத்தினர் நேற்று அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்தினர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-

மன உளைச்சல்

குடியிருப்புக்கு அருகாமையில் டாஸ்மாக் கடை அமைந்திருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகள் என பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதில் மது பிரியர்கள் மதுவை குடித்துவிட்டு மெயின் ரோட்டில் அரைகுறை ஆடையுடன் கிடப்பதுடன், அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளின் முன்பு மதுபானம் குடித்துவிட்டு அங்கேயே போதையில் விழுந்து கிடக்கிறார்கள். இதனால் நாங்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். எனவே இங்குள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் மாவட்ட மேலாளர் திருமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என்று மது பிரியர்கள் கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்