காலி குடங்களுடன் பெண்கள் மறியல்
நடுவீரப்பட்டு அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்,
குடிநீர் இன்றி தவிப்பு
நடுவீரப்பட்டு அருகே சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பத்திரக்கோட்டை பள்ளத்தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 20 நாட்களாக ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கவில்லை. இதனால் அவர்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வந்தனர்.
வேறு வழியின்றி அருகில் உள்ள வயல்வெளி பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். இது பற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
மறியல்
இந்நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் குறிஞ்சிப்பாடி - பாலூர் சாலையில் காலி குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்ததும் நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். இதை கேட்ட பெண்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இருப்பினும் இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.