குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
துறையூர்:
குடிநீர் வழங்கவில்லை
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த கீரம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக காவிரி கூட்டுக்குடிநீர் வழங்கப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை துறையூர்-பெரம்பலூர் மெயின் ரோட்டில் பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற துறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரகாந்த், அமரகவி, முத்துச்செல்வன் மற்றும் ஒன்றிய ஆணையர் சரவணகுமார், ஊராட்சி தலைவர் செந்தில் உள்ளிட்டோர் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில், போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இந்த மறியலால் துறையூர்-பெரம்பலூர் நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.