வள்ளியூர் யூனியன் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை
சீராக குடிநீர் வழங்கக்கோரி வள்ளியூர் யூனியன் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட தெற்கு வள்ளியூர் பஞ்சாயத்தை சேர்ந்த ராஜலிங்கபுரம், காருண்யாபுரம், ராமலிங்கபுரம் கிராம பகுதிகளுக்கு கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த 3 கிராமங்களை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் வள்ளியூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களுடன் யூனியன் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சீராக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.