சர்ப்ரைஸ் கிப்ட் தருவதாக கூறிய இளைஞர்: காருக்குள் ஏறிய கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடூரம்

திவாகரிடம் பணம், நகை கேட்டு பிரின்சி தொல்லை கொடுத்துள்ளார்.

Update: 2024-05-11 16:31 GMT

திண்டுக்கல்,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் அருண் ஸ்டாலின் விஜய் (வயது 32). இவரது மனைவி பிரின்சி (வயது 27). இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். பிரின்சி பல்லடத்தில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்தார். அதே மில்லில் ராமநாதபுரம் முதுகுளத்தை சேர்ந்த திவாகர் (வயது 24) என்ற இளைஞரும் பணியாற்றி வந்தார். திவாகருக்கு திருமணமாகி உமாபாரதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இதனிடையே, பல்லடத்தில் ஒரே மில்லில் பணியாற்றிவந்தபோது கடந்த 2 ஆண்டுகளாக திவாகருக்கும், பிரின்சிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனிடையே, திவாகரிடம் பிரின்சி அடிக்கடி பணம், நகை கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திவாகர் பிரின்சியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.

இதற்காக முதுகுளத்திலுள்ள தனது உறவினர் இந்திரகுமாரை (வயது 31) பல்லடத்திற்கு ஆம்னி கார் எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து இந்திரகுமார் நேற்று காலை பல்லடத்திற்கு ஆம்னி காரை கொண்டுவந்துள்ளார். பின்னர் ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு பிரின்சியை திவாகர் வரவழைத்துள்ளார். அங்கு காருக்குள் பிரின்சி ஏறியுள்ளார்.

அப்போது, சர்ப்ரைஸ் கிப்ட் தருவதாக கூறிய திவாகர் கள்ளக்காதலி பிரின்சியிடம் கண்களை மூடும்படி கேட்டுள்ளார். இதையடுத்து, பிரின்சியும் தனது கண்களை மூடியுள்ளார். அப்போது, திவாகர் காருக்குள் வைத்திருந்த நைலான் கயிற்றால் பிரின்சியின் கழுத்தை நெறித்துள்ளார். இதில் மூச்சுத்திணறி பிரின்சி உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பிரின்சியின் உடலை முதுகுளத்தூர் செல்லும் வழியில் சாலையோரம் புதைக்க முடிவு செய்தனர். இதற்காக உடலை காருக்குள் வைத்து இருவரும் நேற்று இரவு முதுகுளத்தூர் நோக்கி புறப்பட்டனர். காரை இந்திரகுமார் ஓட்டிச்சென்றார்.

காரை பின் தொடர்ந்து திவாகர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகே பள்ளப்பட்டி பிரிவு காரை நிறுத்தி சாலையோரம் குழி தோண்டியுள்ளனர். அப்போது, அந்த வழியாக மதுரை மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் காரில் சோதனை செய்தனர். அதில், பெண்ணின் சடலம் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அம்மையநாயக்கனூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, சடலமாக இருந்த பிரின்சி உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, கள்ளக்காதலன் திவாகர் அவரது உறவினர் இந்திரகுமாரை கைது செய்தனர். பெண்ணின் சடலத்தை ஏற்றி வந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சர்ப்ரைஸ் கிப்ட் தருவதாக கூறி காருக்குள் ஏறிய கள்ளக்காதலியை இளைஞர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்