உரிமை தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாமில் ஆர்வமுடன் பங்கேற்ற பெண்கள்

குமரியில் 400 இடங்களில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பப்பதிவு முகாமில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று பதிவு செய்தனர்.

Update: 2023-07-24 18:45 GMT

நாகர்கோவில்:

குமரியில் 400 இடங்களில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பப்பதிவு முகாமில் பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று பதிவு செய்தனர்.

மகளிர் உரிமை திட்ட முகாம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் முகாம் குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. இந்த பணி வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்த முகாமில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று உரிைம தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள 400 ரேஷன் கடைகளில் சுமார் 3 லட்சத்திற்கு மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு இந்த விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது.

இதற்கிடையே கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப பதிவுக்கான முதற்கட்ட முகாம் குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கியது.

கூட்டம் அலைமோதல்

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 245 முகாம்களும், தோவாளை தாலுகாவில் 59 முகாம்களும், கல்குளம் தாலுகாவில் 126 முகாம்களும் என மொத்தம் 400 இடங்களில் நடந்தது. இந்த முகாமானது காலை 10 மணிக்கு முதல் மாலை 5 மணி வரை நடந்தது. நாகர்கோவிலில் மாநகர பகுதியில் உள்ள ரேஷன் கடைகள், அரசு பள்ளிகளில் நடந்த முகாமில் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை பதிவு செய்ய பெண்கள் ஆர்வத்துடன் வந்தனர். அங்கு முகாமில் இருந்த அதிகாரிகள் விண்ணப்ப படிவங்களை பரிசோதித்து பெற்றுக் கொண்டனர். விண்ணப்ப பதிவு முகாம்களில் பெண்கள் கூட்டம் காலை முதலே அலைமோதியது.

விண்ணப்பங்களுடன் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு இணைக்கப்பட்ட வங்கி புத்தகம் மற்றும் மின் கட்டண கார்டு ஆகியவற்றை இணைத்திருந்தனர். சிலர் வங்கி புத்தகத்துடன் ஆதார் கார்டு இணைக்காமல் இருந்தனர். இவற்றை பரிசோதித்த அதிகாரிகள் அதை சரி செய்து விட்டு மீண்டும் வருமாறு திருப்பி அனுப்பினர்.

தள்ளுமுள்ளு- வாக்குவாதம்

மேலும் கிராமப்புற பகுதிகளில் நடந்த முகாம்களில் ஒவ்வொரு முகாமிலும் நூற்றுக்கணக்கானோர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய திரண்டனர். இதனால் ஒரு சில இடங்களில் லேசான தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாத சம்பவங்கள் நடந்ததை காண முடிந்தது. இந்த முகாமானது வருகிற 4-ந் தேதி வரை நடைபெறும். இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக விளவங்கோடு, திருவட்டார் மற்றும் கிள்ளியூர் ஆகிய 3 தாலுகாவில் மீதமுள்ள 364 ரேஷன் கடையில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் உரிமை தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வருகிற 5-ந் தேதி முதல் 16-ந் தேதிக்குள் அந்த பகுதியில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் வழங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலெக்டர் ஆய்வு

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த முகாமை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்