மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலர்கள் உண்ணாவிரதம்

மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலர்கள் உண்ணாவிரதம்

Update: 2023-02-10 10:39 GMT

திருப்பூர்

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிநீக்கத்தை கண்டித்து மகளிர் மேம்பாட்டு நிறுவன அலுவலர்கள் சங்கத்தினர் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.

உண்ணாவிரதம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திருப்பூர் மாவட்ட அலகில் பணியாற்றி வந்த 11 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஊரக வாழ்வாதார இயக்க ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரியும் உண்ணாவிரத போராட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்றது.

போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சாந்தா முன்னிலை வகித்தார். துணை தலைவர் சுமதி வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் செல்வி கோரிக்கைகள் குறித்து பேசினார்.

பணி பாதுகாப்பு

10 ஆண்டுகளாக பணியாற்றி வந்த வட்டார ஒருங்கிணைப்பாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் உயர் அதிகாரிகள் மதிப்பீடு என்ற அளவீட்டை பின்பற்றி பணிநீக்கம் செய்துள்ளனர். மகளிர் திட்டத்தில் பணியாற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார மேலாளர்கள், ஊராட்சி கணக்காளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும், தகுதி வாய்ந்த வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு வட்டார மேலாளர் பதவி வழங்கக்கோரியும், கணக்காளர்களுக்கு தகுந்த மதிப்பூதியம் வழங்க கோரியும் பேசினார்கள்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சாந்தி, சி.பி.எஸ்.ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் நவீன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் ரமேஷ் நிறைவுரையாற்றினார். முடிவில் பொருளாளர் அம்சவேணி நன்றி கூறினார். இந்த உண்ணாவிரதத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். மாலையில் உண்ணாவிரதம் நிறைவடைந்தது.

--------

குறிப்பு படம் உண்டு.

Tags:    

மேலும் செய்திகள்