பாலூட்டும் தாய்மார்கள் அறை முறையாக பராமரிக்கப்படுமா?

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பஸ் நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறையை முறையாக பராமரிப்பதோடு, பூட்டிக்கிடக்கும் அறையை திறந்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2022-10-10 20:38 GMT

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பஸ் நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறையை முறையாக பராமரிப்பதோடு, பூட்டிக்கிடக்கும் அறையை திறந்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தாய்மார்கள் பாலூட்டும் அறை

ஒரு தாய் தனது குழந்தையை எந்தவித நோயும் இன்றி நல்ல ஆரோக்கியத்துடன் வளர்ப்பதற்கு பிறந்த ஒரு வருடத்திற்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியமாகும். பழங்கால பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து ஆரோக்கியத்துடன் வளர்த்து வந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பாலூட்டும் தாய்மார்கள் பணி மற்றும் பயண நிமித்தம் காரணமாக வெளியே செல்லும்போது பஸ் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

தங்கள் இருப்பிடத்தில் இருந்து பணிபுரியும் இடத்திற்கோ அல்லது தாங்கள் செல்ல விரும்பும் இடங்களுக்கோ செல்ல சில மணி நேரங்கள் தேவைப்படும். தாங்கள் அணியும் ஆடை மற்றும் பல்வேறு இடையூறுகள் காரணமாக பொது இடத்தில் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இ்ந்த நிலையில் பஸ் நிலையங்களில் காத்திருக்கும் வேளையில் தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு எந்தவித இடையூறும் இன்றி தனிமையில் வசதியாக பாலூட்டும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறக்கப்பட்டு இயங்கி வந்தது.

இந்த அறையில் இருக்கைகள், மின்விசிறி, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பஸ் நிலையங்களில் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இது மிகுந்த வரப்பிரசாதமாக அமைந்தது.

பராமரிப்பு இல்லாத அவலம்

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பஸ் நிலையங்களில் அமைக்கப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் தற்போது பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது.

தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த தாய்மார்கள் பாலூட்டும் அறை அகற்றப்பட்டு புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் உள்ள பாலூட்டும் அறை சரியான சுகாதார வசதி இன்றி காணப்படுகிறது. இங்கு குடிநீர் வசதி எதுவும் இல்லை. அதனை தினமும் சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது.

பூட்டி கிடக்கிறது

பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை பூட்டியே கிடக்கிறது. இதேபோல் கும்பகோணம் பஸ் நிலையத்தில் உள்ள பாலூட்டும் அறையும் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய நகரங்களில் உள்ள நகராட்சி பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் அமைக்கப்பட்டன. அவ்வப்போது ஊழியர்கள் வந்து தூய்மை பணியை மேற்கொண்டு செல்கின்றனர். ஆனால் பாலூட்டும் அறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லை.

இதனால் இந்த பஸ் நிலையங்களில் பாலூட்டும் அறை இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது.

பயன்பாட்டுக்கு கொண்டுவர...

எனவே மூடப்பட்டு கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறையை மீண்டும் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். பாலூட்டும் அறையை சுத்தமாக பேணி பாதுகாக்க வேண்டும். கட்டுமான பணி நடைபெறும் பாலூட்டும் அறை பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குகொண்டுவர வேண்டும் என்பதே தாய்மார்களின் பிரதான கோரிக்கையாகும்.

இது தொடர்பாக பெண்கள் கூறிய கருத்துக்கள் வருமாறு:-

தஞ்சை சீனிவாசபுரம் ராஜாஜிசாலையை சேர்ந்த கற்பகம்:- பஸ்களில் கைக்குழந்தையுடன் பயணிக்கும் பெண்கள் பஸ் நிலையங்களில் பஸ்சுக்காக காத்திருக்க கூடிய பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு பால் புகட்ட ஒவ்வொரு பஸ் நிலையங்களிலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இதனை தாய்மார்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் உரிய பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்தவில்லை.

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையில் இருக்கைகள் போடப்பட்டு இருந்தாலும் சுத்தமாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் தாய்மார்கள் சிரமப்படும் சூழல் உள்ளது. எனவே இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

விரைந்து முடிக்க வேண்டும்

நாகையை சேர்ந்த கீர்த்திகா:- தாய்மை உணர்வோடு தொடங்கப்பட்ட இந்த பாலூட்டும் அறை தற்போது பல்வேறு இடங்களில் பயன்பாடு இன்றி கிடப்பது வேதனைக்குரியதாகும். நாகை பஸ் நிலையத்தில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை தற்போது சீரமைப்பு காரணமாக பயன்பாட்டில் இல்லை. இந்த பணிகளை விரைந்து முடித்து உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

தற்போது உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் எந்தவித வசதியும் இல்லாததால் பச்சிளம் குழந்தையுடன் பஸ் நிலையத்துக்கு வரும் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு இதனை தொடர்ந்து செயல்படுத்தவும், முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாய்மார்கள் சிரமம்

திருவாரூர் புலிவலம் பகுதியை சேர்ந்த லெட்சுமிபிரியா:- தாய்மார்கள் வெளியூர் செல்லும் நேரங்களில் தங்களது பச்சிளங்குழந்தையை தூக்கி செல்லும்போது, குழந்தை பசியால் அழும்போது பாலூட்டுவதற்கு மறைவான இடம் இல்லாமல் இருந்து வந்தது. இதனால் பொது இடத்தில் தாய்மார்கள் குழந்தைக்கு பாலூட்டுவதற்கு அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் அனைத்து பஸ் நிலையங்களிலும் தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை திறக்கப்பட்டது. இந்த அறை தாய்மார்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்து வந்தது. இந்த நிலையில் பாலூட்டும் அறைகளை சரிவர பராமரிக்காததால் அறை இருந்தும் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது வேதனைக்குரியது. இதனால் தாய்மார்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே பராமரிப்பு இல்லத பாலூட்டும் அறைகளை பராமரிக்கவும், மூடிக்கிடக்கும் பாலூட்டும் அறைகளை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய பஸ்நிலையத்தில் அமைக்கப்படுமா?

மயிலாடுதுறையை சேர்ந்த சாவித்திரி:-மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை சுகாதாரமாக உள்ளது வரவேற்கக்கூடியது. ஆனால் இந்த அறையில் சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை.

மேலும் பழைய பஸ் நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் அளவிற்கு புதிய பஸ் நிலையத்திலும் பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு வந்து செல்லும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் அனைத்து வசதிகளுடன் தனி அறை அமைத்து தர வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்