கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு மனு கொடுக்க வந்த பெண்கள்
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க பெண்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வந்தனர்.
திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருக்குமரன், அமைப்பு செயலாளர் மீனா ஆகியோர் தலைமையில் வன்னிக்கோனேந்தல் அருகே உள்ள மேசியாபுரத்தை சேர்ந்த மதுரைவீரன் மற்றும் சிலர் நெல்லை கலெக்டர் அலுவலத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்களில் பெண்கள் பலர் கண்களில் கருப்பு துணி கட்டி இருந்தனர்.
அவர்கள் கொடுத்த மனுவில், 'எங்கள் பகுதியில் 75 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால் எங்கள் பகுதிக்கு பொது கழிப்பறை இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எங்கள் கோரிக்கையை ஏற்று கழிப்பறை கட்டுவதற்கு பணிகள் தொடங்கிய நிலையில் சிலர் அதனை தடுத்து வருகின்றனர். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகளை தொடங்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.