குமராட்சி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
குமராட்சி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காட்டுமன்னார்கோவில்,
குமராட்சி அருகே திருநாரையூர் கிராமத்தில் உள்ள கீழத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இப்பகுதியில் குடிநீர் தொட்டி இயக்குபவர், சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. மேலும் குறைந்த திறன் கொண்ட மின்மோட்டார் மூலமும் வினியோகம் செய்யப்படுவதால், முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருச்சி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திருநாரையூர் மெயின் ரோட்டில் காலிகுடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் வாசுவி சோழன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து நடவடிக்கை எடுத்து விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.