காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு பகுதி மக்களுக்கு தாமிரபரணி மற்றும் வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வறட்சி காரணமாக நகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் நகராட்சிக்குட்பட்ட 5 மற்றும் 11-வது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகம் செய்யபடவில்லை எனவும், கழிவுநீர் வாறுகால் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என கோரி புதிய பஸ் நிலையம் அருகே மதுரை சாலையில் காலி குடங்களுடன் ஏராளமான பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் அறிவழகன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியா பாய் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனே நகராட்சி மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில். மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.