குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

கோட்டூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-29 11:02 GMT

கோட்டூர்:-

கோட்டூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நெம்மேலி கீழத்தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் கடந்த 10 ஆண்டுகளாக சிரமம் உள்ளது.

இந்த நிலையில் இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

துண்டிக்கப்பட்ட குழாய்

நெம்மேலி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய்கள் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு சாலையை செப்பனிடும் போது துன்டிக்கப்பட்ட குடிநீர் குழாய் இதுவரை சீரமைக்கப்படவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்கள் கிராமத்தில் குளம், கிணறு இல்லை. இதனால் குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீர் கிடைப்பதில் சிரமம் உள்ளது.

கூட்டு குடிநீர் திட்டம்

அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இருள்நீக்கி ஊராட்சிக்கு உட்பட்ட நெருஞ்சனக்குடி கிராமத்துக்கு நடந்து சென்று அங்கு இருக்கும் கைப்பம்பில் குடிநீர் எடுத்து வருகிறோம்.

உப்பு தண்ணீரை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்