கள்ளக்குறிச்சி அருகே கழுத்தை அறுத்து பெண் படுகொலை கணவர் வெறிச்செயல்

கள்ளக்குறிச்சி அருகே கழுத்தை அறுத்து பெண்ணை படுகொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-03 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் முருகன்(வயது 25). பூம்பூம் மாட்டுக்காரர் ஆவார். இவருக்கும் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மோ.வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்த விஜயா(20) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபமடைந்த விஜயா, தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கழுத்தை அறுத்து கொலை

இந்நிலையில் முருகன் நேற்று இரவு மோ.வன்னஞ்சூருக்கு வந்தார். அப்போது முருகனுக்கும், விஜயாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த முருகன் தான் மறைத்து வைத்து எடுத்துச் சென்ற கத்தியால் விஜயாவின் கழுத்தை சராமாரியாக அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

கைது

அதில் முருகனுக்கும், விஜயாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. திருமணம் முடிந்த 4 மாதம் மட்டும் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். அதன்பின்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயா, தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவ்வப்போது முருகன், மோ.வன்னஞ்சூர் வந்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு விஜயாவை அழைத்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். அந்த வகையில் நேற்றும் குடும்பம் நடத்த வருமாறு முருகன் அழைத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், முருகன் விஜயாவை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து விஜயாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த முருகனை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கணவரே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்