ஸ்கூட்டரில் மகளுடன் சென்ற பெண்ணிடம் 2½ பவுன் நகை பறிப்பு
நாகர்கோவிலில் ஸ்கூட்டரில் மகளுடன் சென்ற பெண்ணிடம் 2½ பவுன் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்:
நாகர்கோவிலில் ஸ்கூட்டரில் மகளுடன் சென்ற பெண்ணிடம் 2½ பவுன் நகையை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஸ்கூட்டரில் மகளுடன்...
நாகர்கோவில் கேம்ப்ரோடு பாக்யா தெருவை சேர்ந்தவர் பிரதீப். இவருடைய மனைவி அன்றினோ ஆல்பினோ ரெனிஷா (வயது 33). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அந்த சிறுமி அருகில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். தினமும் மாலையில் எறும்புக்காடு அருகே காரவிளை பகுதியில் டியூசன் செல்வது வழக்கம்.
அதன்படி சம்பவத்தன்றும் சிறுமி வழக்கம்போல் டியூசன் சென்றார். இதையடுத்து டியூசன் சென்ற தனது மகளை அழைத்து வருவதற்காக இரவு 9 மணியளவில் அன்றினோ ஆல்பினோ ரெனிஷா ஸ்கூட்டரில் காரவிளைக்கு சென்றார். பின்னர், டியூஷனில் இருந்து மகளை அழைத்துக்கொண்டு மீண்டும் ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
2½ பவுன் நகைப்பறிப்பு
எறும்புக்காடு பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகில் வந்தபோது, அவர்களுக்கு பின்னால் ஒரு மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் ஸ்கூட்டரின் அருகில் மோதுவதுபோல் வந்து திடீரென அன்றினோ ஆல்பினோ ரெனிஷாவின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த அன்றினோ ஆல்பினோ ரெனிஷா திருடன்... திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் ராஜாக்கமங்கலம் சாலையில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
கேமரா காட்சிகள் ஆய்வு
பின்னர் இதுகுறித்து அன்றினோ ஆல்பினோ ரெனிஷா ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.