போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள அய்யங்கோவில்பட்டு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி மகள் மான்விழி (வயது 25). இவர் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அங்குள்ள வளாகத்திற்குள் வந்த அவர், திடீரென தான் வைத்திருந்த கேனை எடுத்து திறந்து அதிலிருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், விரைந்து சென்று மான்விழியை தடுத்து நிறுத்தி அவரிடமிருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி அவர் மீது முன்னெச்சரிக்கையாக தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர் கூறுகையில், எனக்கும், காணை அருகே ஆரியூரை சேர்ந்த சதீஷ்குமார்(30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்தோம். என்னை திருமணம் செய்துகொள்வதாக அவர் ஆசைவார்த்தை கூறி பழகி வந்தார். இந்த சூழலில் சதீஷ்குமார், அவரது பெற்றோரின் பேச்சை கேட்டுக்கொண்டு என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அவரிடம் விசாரணை நடத்தி அவருடன் என்னை சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாரிடம் முறையிட்டார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து விசாரிப்பதாக கூறினர். மேலும் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று மான்விழியை போலீசார் எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.