பெண்ணிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு; 2 பேர் கைது
ராமநாதபுரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 7 பவுன் தாலிச்சங்கிலி பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து 7 பவுன் தாலிச்சங்கிலி பறித்து சென்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
ராமநாதபுரம் வடக்கு புதுத்தெரு பெரியகருப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் என்பவரின் மனைவி வித்யா (வயது 33). இவர் கடந்த மாதம் 18-ந்தேதி உறவினர் இல்ல விழாவிற்கு செல்வதற்காக வடக்குத்தெரு பழைய சந்தோஷ் தியேட்டர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் வித்யா கழுத்தில் அணிந்து இருந்த 6¾ பவுன் தங்க தாலிச்சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து வித்யா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவிட்டார்.
2 பேர் கைது
போலீசார் நடத்திய விசாரணையில் பேரையூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தற்போது சிவகாசி ஆயில் மில் காலனி பகுதியில் வசித்து வரும் ரூபிஅலி என்பவரின் மகன் சர்தார் அலி (27), மதுரை சோழவந்தான் பத்மா கார்டன் பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் அலி மகன் அப்சர்அலி (22) ஆகிய இருவரும் தான் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் தமிழகம் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் நகை பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் போலீசார் மேற்கண்ட இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.