சம்பள பாக்கியை கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை

கோவையில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சம்பள பாக்கியை கேட்டு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-10-08 20:15 GMT


கோவையில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சம்பள பாக்கியை கேட்டு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நிர்வாக இயக்குனர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சம்பள பாக்கி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 40 வயது பெண் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

நான், கோவை-அவினாசி சாலை ஹோப் காலேஜ் அருகே ஸ்ரீநகரில் உள்ள தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் 2021-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வேலை பார்த்து வந்தேன். எனக்கு மாத சம்பளமாக ரூ.70 ஆயிரம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களால் வேலையில் இருந்து நின்றுவிட்டேன். அப்போது எனக்கு தனியார் நிறுவனம் சார்பில் 4 மாத சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது.

இதுதொடர்பாக நிறுவன அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டு வந்தேன். ஆனால் அவர்கள் காலம் தாழ்த்தி வந்ததுடன், சரியாக பதில் அளிக்கவில்லை.

பாலியல் தொல்லை

இதனால் நான், சம்பவத்தன்று பொள்ளாச்சியில் இருந்து ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு நேரடியாக வந்து சம்பள பாக்கியை தரும்படி கேட்டேன். அப்போது அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் சுதாகர் மற்றும் சின்னகாளி ஆகியோர் சம்பள பணம் வேண்டும் என்றால் ஆசைக்கு இணங்குமாறும், பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்தனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்கள், என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது சம்பள பாக்கியை வாங்கித்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

2 பேர் மீது வழக்கு

இந்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர்கள் சுகாதர், சின்னகாளி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

சம்பள பணம் கேட்டு சென்ற பெண்ணுக்கு, பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்