குடிநீர் லாரி மோதி பெண் பலி
பந்தலூரில் குடிநீர் லாரி மோதி பெண் பலியானார். இது தொடர்பாக டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர்
பந்தலூரில் குடிநீர் லாரி மோதி பெண் பலியானார். இது தொடர்பாக டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிநீர் லாரி
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவரது மகள் இந்திராணி(வயது 29).
அந்த பகுதியில் நேற்று முன்தினம் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது லாரியின் பின்புறம் நின்று, குடங்களை வைத்து, இந்திராணி குடிநீர் பிடித்து கொண்டு இருந்தார். இதை அறியாமல் டிரைவர் திடீரென லாரியை பின்னோக்கி இயக்கியதாக தெரிகிறது.
அப்போது அங்கு குடிநீர் பிடித்துக்கொண்டு இருந்த இந்திராணி மீது லாரி மோதியது. இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
டிரைவரிடம் விசாரணை
அப்போது அவரது தலையில் லாரியின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த இந்திராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவாலா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.