மேட்டூர் அருகே கிரேன் மோதி பெண் பலி

மேட்டூர் அருகே கிரேன் மோதி பெண் பலியானார்.

Update: 2023-07-12 18:45 GMT

மேட்டூர்

மேட்டூரை அடுத்த கருப்பு ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் அழகுராஜ். இவருடைய அக்காள் சித்ரா (வயது 48). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தம்பி அழகுராஜ் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர்களுடைய உறவினரான கோபி என்பவர் கருமலைக்கூடல் டி.எம்.பி. நகர் பகுதியில் உள்ளார். அவருடைய குழந்தைகளை தினசரி பள்ளிக்கு ஸ்கூட்டரில் அழைத்து செல்லும் பணியை சித்ரா மேற்கொண்டு வந்தார். நேற்று காலை சித்ரா, கோபியின் குழந்தைகளை புது சாம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் விட்டு விட்டு வீட்டுக்கு ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

மேச்சேரியில் இருந்து மேட்டூர் நோக்கி வந்த ஒரு கிரேன் எதிர்பாராதவிதமாக சித்ரா ஓட்டி வந்த ஸ்கூட்டரின் மீது மோதியது. இதில் ஸ்கூட்டர் சற்று வேகமாக சென்று நிலைதடுமாறி முன்னால் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பஸ் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரை ஓட்டிச்சென்ற சித்ரா தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

இந்த விபத்து குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிரேனை ஓட்டி வந்த தொளசம்பட்டியை சேர்ந்த செல்வகுமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்