கார் மோதி பெண் பலி; சிறுமி படுகாயம்
ராஜபாளையம் அருகே கார் மோதி பெண் பலியானார். சிறுமி படுகாயம் அடைந்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே கார் மோதி பெண் பலியானார். சிறுமி படுகாயம் அடைந்தார்.
பெண் பலி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் தங்க முனியாண்டி. இவருடைய மனைவி பாண்டிச்செல்வி (வயது 26). இவர்களுக்கு பாரதி, பார்கவி என 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று பாரதியை பள்ளிக்கு அனுப்பி விட்டு, பார்கவியை அங்கன்வாடியில் விடுவதற்காக பாண்டிச்செல்வி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது தென்காசியில் இருந்து ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த கார், பாண்டிச்செல்வி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவர் கைது
உடனே அப்பகுதி மக்கள் படுகாயம் அடைந்த பார்கவியை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
உறவினர்கள் போராட்டம்
இந்த நிலையில் பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கூறி பாண்டிச்செல்வியின் உறவினர்கள் சேத்தூர் காமராஜர் நகர் எதிரே தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவீரபாண்டியன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அடிக்கடி இப்பகுதியில் விபத்துகள் நடப்பதால் வேகத்தடைகள் அமைக்கவும், இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து முதல் கட்டமாக அந்த இடத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.வேலூரில் இருந்து சபரிமலைக்கு சென்ற பக்தர்கள் காரில் திரும்ப ஊருக்கு செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.