கார் மோதி பெண் பலி

கடையநல்லூர் அருகே மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு திரும்பிய போது கார் மோதி பெண் பலியானார்.

Update: 2023-01-17 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்துவிட்டு திரும்பிய போது கார் மோதி பெண் பலியானார்.

அழைப்பிதழ் கொடுக்க சென்றார்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சாம்பவர் வடகரை கீழப்பொய்கை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலை மனைவி பத்திரகாளி (வயது 35). இவர்களுக்கு மாடசாமி (17), ராம் பெருமாள் (13) ஆகிய மகன்களும், மகளும் உள்ளனர்.

மகளுக்கு பூப்புனித நீராட்டு விழா நடைபெற இருந்தது. இந்த நிலையில் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக பத்திரகாளி தனது உறவினரான கேரள மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த சூர்யா என்பவருடன் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்றார்.

கார் மோதி பலி

பின்னர் அவர்கள் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். கடையநல்லூர் அருகே குமந்தாபுரம் பகுதியில் வந்த போது, எதிரே ஒரு கார் வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் கார், மோட்டார் சைக்கிள் மீது மோதி, அருகில் உள்ள டீக்கடையில் புகுந்தது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பத்திரகாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சூர்யா படுகாயம் அடைந்தார். மேலும் டீக்கடையில் இருந்த பூதப்பாண்டி (49), கார் டிரைவர் யாசர் அரபாத் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.

போலீஸ் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சூர்யா மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பலியான பத்திரகாளி உடல் பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Tags:    

மேலும் செய்திகள்