திருமயம் அகில்கரை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி அமுதா (வயது 45). இவர் நேற்று முன்தினம் இரவு திருமயம் அருகே உள்ள சமத்துவபுரத்தில் இருந்து திருமயத்திற்கு மதுரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக அமுதா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அமுதாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அமுதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.