ஓடும் பஸ்சில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை

கோபால்பட்டி அருகே நிலத்தகராறில் ஓடும் பஸ்சில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய உறவினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-04-06 16:55 GMT

 தனியார் பஸ்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி கிராமம் உள்ளது. இங்கிருந்து நேற்று மாலை 4½ மணி அளவில், திண்டுக்கல் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சை, சாணார்பட்டியை சேர்ந்த விஜய் (வயது 40) ஓட்டினார். பஸ்சில் 15-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

திண்டுக்கல்-நத்தம் சாலையில், க.பங்களா என்னும் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றது. அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பஸ்சில் ஏறினார். இதேபோல் 60 வயதான முதியவர் ஒருவர், தனது மகனான 15 வயது சிறுவனுடன் அதே பஸ்சில் ஏறினார்.

கழுத்தை அறுத்து படுகொலை

பஸ்சின் முன்பக்க படிக்கட்டு அருகே அந்த பெண் அமர்ந்திருந்தார். அதில் இருந்து 5 இருக்கைகள் தள்ளி அந்த முதியவர் உட்கார்ந்திருந்தார். பங்களா பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் புறப்பட்டது. அதற்கு அடுத்த பஸ் நிறுத்தமான கோபால்பட்டி அருகே உள்ள தி.வடுகபட்டி பிரிவில் பஸ் நின்றது.

பஸ்சில் இருந்து பயணிகள் சிலர் இறங்கி கொண்டிருந்தனர். அங்கிருந்து திண்டுக்கல் நோக்கி மீண்டும் பஸ் புறப்பட தயாரானது. அப்போது திடீரென பஸ்சில் அமர்ந்திருந்த முதியவர், தான் வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை ஆட்டை அறுப்பதை போல கழுத்தை அறுத்தார். இதில் நிலை குலைந்து இருக்கையிலேயே சரிந்த அந்த பெண், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அலறியடித்து ஓட்டம்

கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதேபோல் அந்த பெண்ணை கொலை செய்த முதியவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

தன் கண் எதிரே தனது தந்தை ஒரு பெண்ணை கொலை செய்ததை கண்ட சிறுவன் அதிர்ச்சியில் உறைந்து விட்டான். இதனையடுத்து பஸ்சை நிறுத்தி விட்டு டிரைவர், கண்டக்டரும் கீழே இறங்கினர்.

போலீசார் விசாரணை

ஓடும் பஸ்சில் நடந்த இந்த கொடூரக்கொலை குறித்து சாணார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் பஸ்சுக்குள் பிணமாக கிடந்த அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

நிலத்தகராறில் முன்விரோதம்

போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் தமயந்தி (வயது 42). கோபால்பட்டி அருகே உள்ள கணவாய்பட்டி ஊராட்சி க.பங்களா பகுதியை சேர்ந்தவர். அவருடைய கணவர் கோபி (50), திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவராக உள்ளார்.

கோபிக்கும், அவருடைய அண்ணன் ராஜாங்கம் (60) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இதுகுறித்த வழக்கு, திண்டுக்கல் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

தாயை பார்க்க...

சென்னைக்கு சென்ற தமயந்தி, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.

நிலப்பிரச்சினைக்கு தமயந்தி தான் முக்கிய காரணம் என்று கருதி, அவரை தீர்த்துக்கட்ட ராஜாங்கம் முடிவு செய்தார். இதனால் தமயந்தியை அவர் கண்காணித்து வந்தார்.

இந்தநிலையில் தான் நேற்று மாலை தமயந்தி, திண்டுக்கல் அருகே தோட்டனூத்து கிராமத்தில் வசிக்கிற தனது தாயை பார்க்க பஸ்சில் பயணம் செய்திருக்கிறார்.

வலைவீச்சு

இன்னும் ஓரிரு நாட்களில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இதற்காக வக்கீலை சந்திக்க தமயந்தி முடிவு செய்து திண்டுக்கல் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து தமயந்தியை பின்தொடர்ந்து அதே பஸ்சில் ராஜாங்கம் தனது மகனுடன் ஏறினார். தி.வடுகபட்டி பிரிவு அருகே பஸ் நின்றபோது தமயந்தியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு ராஜாங்கம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதற்கிடையே தலைமறைவான அவரை பிடிக்க போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஓடும் பஸ்சில் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கோபால்பட்டி பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்