மின்னல் தாக்கி பெண் பலி

மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தார்.

Update: 2023-02-03 20:00 GMT

பலத்த மழை

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் பெரம்பலூரை அடுத்த குன்னம் அருகே உள்ள அருமடல் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மனைவி அலமேலு(வயது 37). இவர் அப்பகுதியில் உள்ள வயல்காட்டில் நேற்று மாலை 4 மணியளவில் தனக்கு சொந்தமான மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

மின்னல் தாக்கி சாவு

இதனால் மழையில் நனையாமல் இருப்பதற்காக அலமேலு, அருகில் உள்ள புளியமரத்துக்கு அடியில் ஒதுங்கி நின்றார். அப்போது மின்னல் தாக்கியதில் அலமேலு பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அலமேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள 5 கம்ப்யூட்டர்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்தன. அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்