மின்னல் தாக்கி பெண் பலி
வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார். மேலும் 3 பேர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தனர்.
கரியாப்பட்டினம்:
வேதாரண்யம் அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார். மேலும் 3 பேர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தனர்.
களை எடுக்கும் பணி
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சி பனையடி குத்தகையை சேர்ந்தவர் சரண்ராஜ். இவர் தனது நிலத்தில் சவுக்கு சாகுபடி செய்துள்ளார். இந்த நிலத்தில் நேற்று களை எடுக்கும் பணி நடந்தது.
இதில் நாகக்குடையான் ஜீவா நகரை சேர்ந்த குஞ்சையன் மனைவி கமலா(வயது 45), அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மனைவி ஜெயலட்சுமி(50), கந்தசாமி மனைவி முத்தம்மாள், நாகக்குடையான் நடுசாலையை சேர்ந்த நடராஜன் மனைவி ஆரவல்லி(60) ஆகிய 4 பேரும் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
மின்னல் தாக்கி பெண் பலி
நேற்று மாலை 4.30 மணி அளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கமலாவை மின்னல் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அருகில் இருந்த 3 பெண்களும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கரியாப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கமலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அதிர்ச்சியில் மயங்கிய பெண்கள்
அதிர்ச்சியில் மயக்கம் அடைந்த பெண்கள் சிறிது நேரத்தில் கண்விழித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர்.இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வயலில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண், மின்னல் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.