மின்னல் தாக்கி பெண் பலி; 2 பேர் படுகாயம்
மின்னல் தாக்கி பெண் பலி; 2 பேர் படுகாயம்
அய்யம்பேட்டை அருகே நடவு பணியின் போது மின்னல் தாக்கி பெண் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்னல் தாக்கி பெண் சாவு
அய்யம்பேட்டை அருகே மாத்தூர் செட்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 55). விவசாயி. நேற்று இவருக்கு சொந்தமான வயலில் 21 பெண் விவசாய கூலி தொழிலாளர்கள் நடவு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை அந்த பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் வயலில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த திருச்சோற்றுத்துறை கீழ ஆதிதிராவிடத் தெருவைச்சேர்ந்த நடராஜன் மனைவி சாரதாம்பாள் (52) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் விவசாயி பாலகிருஷ்ணன் மற்றும் நடவு செய்து கொண்டிருந்த திருச்சோற்றுத்துறையை சேர்ந்த கருணாநிதி மனைவி மஞ்சுளா (40) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
விசாரணை
தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாரதாம்பாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.