கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள்
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்தன.
நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 26). இவர்களுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த மகேஸ்வரிக்கு கடந்த 22.2.2023 அன்று பிரசவ வலி ஏற்பட்டதால், அவரது உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலைமை மருத்துவர் கவிதா தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தனர். இதில் மகேஸ்வரிக்கு அழகான 3 ஆண் குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன. குறை மாதத்தில் பிறந்ததால், குழந்தைகளின் எடை குறைவாக இருந்தது. இதனால் மருத்துவக் குழுவினர் கடந்த 40 நாட்களாக 3 குழந்தைகளையும், பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் குழந்தைகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதுடன், எடையும் அதிகரித்தது.
இதனால் ஆரோக்கியத்துடன் இருக்கும் 3 குழந்தைகளையும் வீட்டுக்கு அனுப்பி வைக்க மருத்துவ குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி 3 குழந்தைகளை பெற்ற மகேஸ்வரிக்கு மருத்துவ குழுவினர் பரிசு வழங்கினர். தொடர்ந்து அவருக்கு குழந்தைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கி, வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.