தேனி அருகே குரங்கு அம்மை நோய் தாக்கி பெண் பலி?; சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு
தேனி அருகே குரங்கு அம்மை நோய் தாக்கி பெண் பலியானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி அருகே குரங்கு அம்மை நோய் தாக்கி பெண் பலியானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் சாவு
தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்தநிலையில் மதுரையில் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த பெண்ணுக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருந்ததாகவும், அதனால் அவர் உயிரிழந்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது.
இந்த தகவலை தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் வீட்டுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று சென்றனர். அந்த பெண் சிகிச்சை பெற்ற மருத்துவ ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அவருடைய குடும்பத்தினரிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
குரங்கு அம்மை பாதிப்பு?
இதுகுறித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி நாதனிடம் கேட்டபோது, "தேனி மாவட்டத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. அறிகுறிகள் இருந்தால் மாதிரி சேகரித்து புனேயில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து முடிவு வந்தால் தான் குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்படும்.
பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பெண்ணுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு தொடர்பாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து மாதிரி எதுவும் சேகரித்து அனுப்பப்படவில்லை. மதுரையில் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் மாதிரி சேகரித்து அனுப்பி இருந்தாலும் தேனி மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் வந்து இருக்கும். இதுவரை அப்படி எந்த பாதிப்பும் உறுதி செய்யப்படவில்லை" என்றார்.