பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
ஏர்வாடி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.
ஏர்வாடி:
சேரன்மகாதேவி அருகே உள்ள மேலச்செவலை சேர்ந்தவர் இசக்கி என்பவருடைய மனைவி இசக்கி அம்மாள் (வயது 65). இவரது மகள் திருக்குறுங்குடியில் வசித்து வருகிறார். மகளை பார்ப்பதற்காக இசக்கி அம்மாள் திருக்குறுங்குடி வந்தார். நேற்று அவர் சொந்த ஊரான மேலச்செவலுக்கு செல்வதற்காக திருக்குறுங்குடி பஸ் நிறுத்தத்தில் இருந்து தென்காசி நோக்கி செல்லும் பஸ்சில் ஏறினார்.
திருக்குறுங்குடி சத்திரம் அருகே உள்ள திருப்பத்தில் பஸ் திரும்பியபோது இசக்கியம்மாள் எதிர்பாராதவிதமாக பஸ்சில் இருந்து படிக்கட்டு வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.