மோட்டார் சைக்கிள் மோதி பெண் சாவு
தேனியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானார்.
தேனி சமதர்மபுரம், முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா மகள் வேலம்மாள் (வயது 55). இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 23-ந் தேதி இவர் தேனி-பெரியகுளம் சாலையில் எடமால் தெரு சந்திப்பு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் காயம் அடைந்த வேலம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வேலம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது உறவினர் செல்வகுமார் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.