மகளிர் போலீசார் லஞ்சம் கேட்பதாக பெண் புகார்
மகனை ஜாமீனில் விடுவிக்க மகளிர் போலீசார் லஞ்சம் கேட்பதாக பெண் புகார்
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள காணை புதுத்தெருவை சேர்ந்த ராஜன் மனைவி எழிலரசி (வயது 41) என்பவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது மகன் அந்தோணிராஜ்(வயது 22), அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய ஒரு பெண்ணை காதலித்தார். அப்பெண்ணின் தந்தை, எனது மகனை எச்சரித்ததால் அந்த பெண்ணுடனான பழக்கத்தை துண்டித்துவிட்டார். ஆனால் அப்பெண், எனது மகனிடம் செல்போன் குறுந்தகவல் மூலம் பழக்கத்தை தொடர்ந்ததால் இதையறிந்த அவரது தந்தை, விழுப்புரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனால் எனது மகன் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் எனது மகன் அந்தோணிராஜை ஜாமீனில் விடுவிக்க வேண்டுமெனில் லஞ்சப்பணம் தர வேண்டும் என்று மகளிர் போலீசார் கூறுகிறார்கள். அவர்கள் பேசிய ஆடியோ என்னிடம் உள்ளது. எனவே அந்தோணிராஜ் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும். மேலும் லஞ்சம் கேட்டு மிரட்டும் போலீசார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.