வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-12 19:56 GMT

திருவெறும்பூரை அடுத்த காட்டூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சாய் வினோத். இவருக்கும் தஞ்சாவூர் மாவட்டம் பூதரியநல்லூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து மகள் மகாதேவி (வயது 25) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் நகை-பணம் மற்றும் பொருட்கள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மீண்டும் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த மகாதேவி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குபோட்டுக்கொண்டார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது குறித்து மகாதேவியின் தாயார் நல்லதங்காள் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், மருமகன் சாய் வினோத் எனது மகளை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி உள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் திருச்சி பாலக்கரை கீழப்படையாச்சிதெருவை சேர்ந்தவர் கவிதைகுமார் (38). துணி இஸ்திரி போடும் தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் அவருக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்தது. இதற்காக தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.அப்போது மது மற்றும் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது என டாக்டர்கள் அறிவுரை வழங்கினர். ஆனாலும் கவிதைகுமார் மதுப்பழக்கத்தை தொடர்ந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்