கடன் தொகையை கணவர் செலவு செய்ததால் தீக்குளித்து பெண் தற்கொலை

திருவாரூர் அருகே மகளிர் குழுவில் வாங்கிய கடன் தொகையை கணவர் செலவு செய்ததால் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-07-09 19:15 GMT

மகளிர் குழுவில் கடன்

திருவாரூர் அருகே உள்ள மணிகண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். இவருடைய மனைவி சூர்யா (வயது28). இருவரும் விவசாய தொழிலாளர்கள். சூர்யா மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கி அதனை வீட்டில் வைத்திருந்தார். இந்த பணத்தை சூர்யாவுக்கு தெரியாமல் ஜெயமோகன் எடுத்துச் சென்று செலவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவில் வாங்கிய கடன் தொகையினை கணவர் செலவு செய்து விட்டதால், அதை எப்படி திரும்ப செலுத்துவது? என்ற கவலையில் சூர்யா இருந்து வந்தார்.

தீக்குளித்து தற்கொலை

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வீட்டில் இருந்த சூர்யா மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதில் அலறித்துடித்தபடி கீழே சுருண்டு விழுந்த சூர்யாவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சூர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்கி வைத்திருந்த பணத்தை கணவர் செலவு செய்து விட்ட விரக்தியில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்