மார்லிமந்து அணையில் குதித்து பெண் தற்கொலை

ஊட்டி அருகே மார்லிமந்து அணையில் குதித்து பழங்குடியின பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-19 18:45 GMT

புதுமந்து, 

ஊட்டி அருகே மார்லிமந்து அணையில் குதித்து பழங்குடியின பெண் தற்கொலை செய்து கொண்டார்.

பழங்குடியின பெண்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மார்லிமந்து பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ். பழங்குடியினர். இவரது மனைவி சத்தியவாணி (வயது 45). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பமாக விவசாயம் செய்து வந்தனர்.இந்தநிலையில் சத்தியவாணிக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநிலை பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும், அவருக்கு பாதிப்பு முற்றிலும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி சத்தியவாணி கோவில் மற்றும் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வருகிறேன் என்று கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

பிணமாக மீட்பு

அன்று இரவு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் அங்கும் இங்கும் தேடி பார்த்தனர். இதையடுத்து காணவில்லை என ஊட்டி புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது மார்லிமந்து அணை பகுதியில் சத்தியவாணியின் காலணி கிடந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் ஊட்டி தீயணைப்பு வீரர்கள், புதுமந்து போலீசார் அணையில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது சத்தியவாணியின் உடல் அணையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டது. இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று தெரிகிறது. எதற்காக தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. மேலும் சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்