அடகு வைத்த நகைகளை கணவர் மீட்டு தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
அடகுவைத்த நகைகளை கணவர் மீட்டு தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணி
அடகுவைத்த நகைகளை கணவர் மீட்டு தராததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரணிைய அடுத்த சதுப்பேரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவரத்தினம் (வயது 30). கண்ணமங்கலத்தை அடுத்த ஒண்ணுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரின் மகள் மீனா (28). இருவருக்கும் 10.6.2020-ல் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு 2 பவுன் நகைகளும், பெண்ணுக்கு 8 பவுன் நகைகளும் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு குழந்தை இல்லை.
அந்த நகைகளை ஜீவரத்தினம் அடகு வைத்து, அதன் மூலம் கிடைத்த பணத்தை ஊரில் உள்ள ஏரியில் மீன் பிடிப்பதற்காக ஏலம் எடுக்க செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது. அடகு வைத்த நகைகளை மீட்டுத் தருமாறு மீனா தனது கணவரிடம் கேட்டு வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் மனமுடைந்த மீனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து களம்பூர் போலீசில் மீனாவின் தந்தை பழனி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆவதால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.