சேலம் கன்னாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி கவிதா. இவர்களது 3-வது மகள் சிவா என்கிற ஜோதிகா (வயது 21). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு டெல்லியில் கூலி வேலை பார்த்து வந்தார். ஜோதிகாவுக்கு முகநூல் மூலம் லிவியா என்ற திருநங்கை அறிமுகமானார். கடந்த ஏப்ரல் மாதம் ஜோதிகாவின் தாய் கவிதா அவரை பார்ப்பதற்காக டெல்லிக்கு சென்றார். ஆனால் அங்கு ஜோதிகா இல்லை. உடனே அவர் மீண்டும் சேலத்துக்கு திரும்பினார். பின்னர் கடந்த 27-ந் தேதி கவிதா, ஜோதிகாவை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது லிவியா போனை எடுத்து ஜோதிகா திருச்சி தாராநல்லூரில் தன்னுடன் தங்கி இருந்ததாகவும், அவர் பழச்சாறில் எலிமருந்து (விஷம்)கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறினார். மேலும் அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து, தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதைஅறிந்த கவிதா திருச்சி வந்து மகளை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதிகா இறந்தார். இது குறித்து கவிதா காந்திமார்க்கெட் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.