ரூ.55 கோடி மோசடி வழக்கில் பெண் கைது

போலி கூட்டுறவு வங்கி மூலம் ரூ.55 கோடி மோசடி வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார்

Update: 2023-06-25 19:30 GMT

போலி கூட்டுறவு வங்கி மூலம் ரூ.55 கோடி மோசடி வழக்கில் பெண் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தனியார் கூட்டுறவு வங்கி

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 67). இவர் தனது உறவினர்கள் தங்கபழம், பிரேம் ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற பெயரில் தனியார் கூட்டுறவு வங்கியை தொடங்கினர். பின்னர் அதிக வட்டி தருவதாக கூறி மாவட்டத்தில் பலரிடம் முதலீடு பெற்றனர்.

அதே போன்று தமிழகம் முழுவதும் மொத்தம் 86 கிளைகள் தொடங்கினர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அதற்கான வட்டி, அசல் தரவில்லை. இந்த நிலையில் இந்த வங்கியில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவித்தார்.

கைது செய்ய தீவிரம்

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது போலியாக கூட்டுறவு வங்கி தொடங்கி அதன் மூலம் பலரிடம் ரூ.55 கோடி வரை மோசடி செய்து இருப்பது தெரிந்தது. பின்னர் விசாரணை நடத்தி பணம் மோசடி செய்த கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஜெயவேல், தங்கப்பழம், அலுவலர் கண்ணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த சரண்யா (31) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரேம் ஆனந்தை போலீசார் கைது செய்திட தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்