பயணியிடம் பர்சை திருடிய பெண் கைது
கருங்கல் பஸ் நிலையத்தில் பயணியிடம் பர்சை திருடிய பெண் கைது
கருங்கல்,
கருங்கல் அருகே உள்ள முள்ளங்கினாவிளை வலியவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் ஜெயக்குமார். இவரது மனைவி மேரி ஸ்டெல்லா (வயது 44). இவர் தன்னுடைய உறவினர் புனிதாவுடன் கருங்கல் சந்தைக்கு வந்து பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு செல்வதற்காக கருங்கல் பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு பஸ்சில் ஏற முயன்ற போது அவர்கள் பின்னால் பஸ் ஏற முயன்ற ஒரு பெண் மேரி ஸ்டெல்லா வைத்திருந்த பையில் இருந்த பர்சை எடுத்தார். அந்த பர்சில் ரூ.2 ஆயிரம் இருந்தது.
இதை பார்த்த மேரி ஸ்டெல்லா சுதாகரித்துக் கொண்டு சத்தம் போட்டார். அத்துடன் அந்தப் பெண்ணை பொதுமக்களின் உதவியுடன் கையும் களவுமாக பிடித்தார். பின்னர் அந்த பெண்ணை கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் ஜாமியாபட்டி நரிக்குறவர் காலனியை சேர்ந்த சக்தி மனைவி தேவி என்பது தெரிய வந்தது. இதையடுத்து தேவியை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இவர் வேறு யாரிடமாவது பணம் திருட்டில் ஈடுபட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.