கோட்டூர்
கோட்டூரை அடுத்த பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதை பயன்படுத்தி அங்கலகுறிச்சியை சேர்ந்த பழனாத்தாள் என்ற மூதாட்டியிடம் 5 பவுன் நகையை மர்ம ஆசாமி பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டூர் போலீசார், தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனிப்படை போலீசார் வஞ்சியாபுரம் பிரிவில்ல் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் மதுரை மாவட்டம் முத்துப்பட்டியை சேர்ந்த மது (வயது 37) என்பதும், பழனாத்தாளிடம் நகை பறித்ததும் தெரியவந்தது. அவர் மீது காஞ்சிபுரம், நெல்லை போன்ற பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருட்டு போன நகை மீட்கப்பட்டது.